Monday 21 May 2012

தேவலோக குழந்தைகள்... Children of Heaven

ஒரு சில படங்களை பார்ததும் மனசு தானா பட படக்கும், நமக்கு தெரிந்த எல்லோரிடத்தும் படத்தை பத்தி, படத்தின் நடிகர்கள் பத்தி, படம் செய்த தாக்கங்களையும் சொல்லி தீர்க்கவேண்டும் என தோன்றும். குறைகளை பற்றி யோசிக்க தோன்றாது. அப்படி பட்ட ஒரு படம் தான் Children of Heaven. 




கண்டிப்பா இந்த படத்த நிறைய பேரு பாத்திருப்பீங்க, இருந்தாலும் நானும் பார்த்துடேன்னு அட்டனஸ் போட வேண்டாம? படம் பார்த்துட்டு பதிவு எழுதாட்டி ”பைரேட் பே - டொரண்ட்” சாபத்துக்கு ஆளாக வேண்டிருக்கும்.

திரைப்படங்களில் கதை சொல்லும் முறைகள் பலவிதம்; சிலர் இந்த உலகமே தான் அறிவாளி என வாய் வலிக்க பாராட்ட வேண்டும் என படமெடுப்பவர்கள். சில படக்கதைகள் தியட்டரிலேயே அழுது அழுது சட்டையெல்லாம் நனைஞ்சு முன்னாடி சீட்ல காயப்போடுற அளவுக்கு இருக்கும். ஒன்னுமெ இல்லாத விசயத்த போற போக்குல சொல்லிட்டு போறவங்களும் உண்டு, அதே ஒன்னும் இல்லாதாத ஊதி பெருசாக்கி படம் பண்ணுறவங்களும் உண்டு. 

Children of Heaven - ” அண்னன் தங்கையும், காணாம போன ஒரு ஜோடி செருப்பும்தான்” கதையே.  ரொம்ப சிம்பிளான ஒரு கதை, ஆனா அது சொல்லப்பட்ட விதம், அந்த ரெண்டு குழந்தைகள் வாழ்ந்த விதம் அழகு. 

கதை - அலி, பத்து வயது சிறுவன், ஏழ்மையான குடும்பம். ஒரு நாள் தங்கை, ஜகாராவோட ஷூவ தச்சு எடுத்துவரும் போது அது குப்பையோடு போய்விடுகிறது. இதை அப்பாவிடம் சொன்னால் கோபப்படுவார், பணம் இல்லாததால் வாங்கியும் தரமுடியாது, அதனால் அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என அலி கூற, ஜகாராவும் ஏற்றுக்கொள்கிறாள். அடுத்த நாளில் இருந்து ஒரே ஷுவை இருவரும் மாற்றி மாற்றி உபயோகிக்க ஆரம்பிக்குறாங்க.

ஜகாரா முதலாம் வகுப்பு அதனால ஸ்கூல் சீக்கிரம் முடிஞ்சுடும். அதுக்கு அப்புறம் ஓட்டமும் நடையுமா ஓடி வந்து அண்ணன் கிட்ட ஷூவ தர, அலி அத போட்டுகிட்டு ஸ்கூலுக்கு போவாரு. இப்படியே தினமும் நடக்க, எப்பவும் அலி ஸ்கூலுக்கு லேட்டா போறாரு. 

பெண் குழந்தைகள் அனியும் ஷூக்கு பதிலா அண்ணன் ஷூ போட்டுட்டு ஜகாரா ஸ்கூல்ல படுற சங்கட்டம், எப்படியாவது தன்னால் தொலைந்த ஷூவ வாங்கி தரணும்னு அலிக்கு இருக்க ஏக்கம், இப்படி கடைசில ஷூ கிடச்சுதா இல்லயா? படம் பார்த்துக்கோங்க.

இது ஒரு இரானியன் படம். நான் இந்த படத்துக்கு முன்னாடி பார்த்த ஒரே இரானியன் படம் “Kite Runner". ரெண்டு படத்துலயும் குழந்தைங்க தான் படமே. இரானியன் படங்கள்ல குழந்தைங்க உணர்வுகள், அவங்க உலகம் அருமையா எடுத்துருப்பாங்க.

 இந்த கதை உங்கள பெரிசா எந்த பாதிப்பு ஏற்படுத்தாது, ஆனா படத்துல நடிச்ச ஜகாரா, அலி உங்க மனச விட்டு அவ்வளவு சீக்கிரம் போக மாட்டாங்க. அவ்ளோ அழகு. குழந்தைங்க படத்துல எப்பவும் நம்மள அழவச்சு பாக்குறதே எல்லா டைரக்டர்க்கும் வேலையா போச்சு. இல்லனா சிரிக்க வைக்குறேன்னு கிச்சு கிச்சு மூட்டுவாங்க. பட் இந்த படம் அந்த ரெண்டு வகையும் இல்ல.

ரெண்டு குழந்தைகளும் அவங்க குடும்பத்து கஷ்டத்த புரிஞ்சுக்கிட்டு நடந்துகிற விதம், ஷூ இன்னொரு பொண்ணு கிட்ட இருப்பது தெரிஞ்சதும் அண்ணனும் தங்கையும் அந்த வீட்டுக்கு போயிட்டு அங்க இருக்க நிலமைய பார்த்துட்டு எதும் கேட்காம அமைதியா திரும்பி வரும் போதும், வெளிப்படுத்தியிருக்கிற நடிப்பு சான்ஸே இல்ல.



அலியா நடிச்சு இருக்க பையன விட தங்கை ஜகாரா கொள்ளை அழகு. வீட்டுல பாத்திரம் கழுவுரது, குட்டிப் பாப்பாவ (அட ஆமாங்க, இவங்க ரெண்டு பெரு பத்தாம இன்னொரு கொய்ந்த வேற இருக்கு, பட் நோ ஸ்கோப் இன் ஆக்டிங்) குட்டிப் பாப்பாவ தூங்க வைக்குறது, டீ போட்டு குடுக்குறது என எல்லாத்துலயுமே க்யூட். அழுகும் போது அநியாயத்துக்கு அழகு, அப்படியே தேடி கண்டுபுச்சு வூட்டுக்கு கூட்டியாந்திரலாமானு தோனுச்சு.  தன்னோட ஷூ இன்னொரு பொண்ணு கால்ல பாத்ததுக்கு அப்புறம் குடுக்குற எக்ஸ்பிரேஷன், அந்த ஷூ மறுபடி குப்பைக்கு போயிட்டுதுனு தெரிஞ்சதும், “ஏன் குப்பையில போட்ட” நு லைட்டா கத்துறதும் என்னத்த சொல்லி பாராட்ட போங்க.

எல்லா தங்கைகளும் இப்படித் தான் போல, அண்ணன் செய்யிற தப்பு எதும் போட்டுக் குடுக்குற பழக்கம் இல்ல.

அப்புறம் பாரட்டபட வேண்டியது அந்த பையன் கேரக்டர். வீட்டு நிலமை புரிஞ்சு நடந்துகிறதுல இருந்து, ஸ்கூல்ல அழுகும் போதும், அப்பாகூட கார்டெனிங் வேலைக்கு போகும் போதும், தங்கச்சிக்காக ஓட்டப் பந்தையத்துல கலந்துகிட்டு கஷ்டப்பட்டு ஓடும் போதும் நல்ல நடிப்பு. நல்ல தேர்வு. அதுவும் பந்தயத்துல முதலாவதா வந்துட்டு, அரை மயக்கதுல “நான் மூனாவதா தான வந்தேன்” நு கேட்டுட்டு, முதலாவதா வந்ததுக்கு வருத்தபட்டு (மூணாவது பரிசு ஒரு ஷூ செட்), தங்கச்சி கிட்ட சொல்ல முடியாம தயங்கி நிக்கிற கிளைமெக்ஸ் அதிஅற்புதம்.

படத்தில புடிக்காதது ஒரே விசயம் தான், கார்டெனிங் வேலை செஞ்சு முடிச்சு பணத்தோட வீடு திரும்பும் போது நடக்குற அந்த கிளிஷேவான ஆக்ஸிடெண்ட். சகிக்கல.  ஒருத்தனுக்கு நல்லதே நடக்க கூடாதா, அப்படியே நடந்து அவன் கணவு காணும் போது தான் எதாவது சம்பவம் நடக்கனுமா?

கதை கிட்டத்தட்ட “The Bi-cycle Theif” தழுவல் என விவாதிக்கப் பட்டாலும், திரைக்கதையும், உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும் பல மடங்கு உயர்ந்ததாக உள்ளது. ஒரு படத்தில் வரும் கதாப்பாதிரம் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவல் பார்பவனுக்கும் ஏற்படவேண்டும், அந்த வகையில் இப்படம் பெரும் வெற்றியே. ஒவ்வொரு காட்சியும் நான், ஜகாராவுக்கு ஷூ கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

The Bi-cycle Theif – படத்தின் முடிவில் ஒரு சோகமும், ஒரு முடிவில்லாமல் முடித்திருப்பதும் இன்று வரை ஒரு உருத்தல் ஏற்படுத்திக் கெண்டேயிருக்கிறது. ஆனால் இங்கு நம்மை அந்த குழந்தைகளை அறிமுகப்படுத்தி, குடும்பப் பின்னனியை சொல்லி, நம்மை அவர்களோடு ஏங்க வைத்து, மகிழ்ச்சியுற செய்திருக்கிறார்கள். படம் முடிந்ததும் ஒரு திருப்தி. 



இயக்குனர் மஜித் மஜிதி – உலகத்துக்கு ஈரானியன் சினிமா பக்கத்த காமிச்சவர். இந்த படம் தான் ஆஸ்கர்ல கலந்துகிட்ட முதல் ஈரானியன் படம். ஆனா “Life is Beautiful” கிட்ட தோத்துபோச்சு. இவர் எப்பவும் நிஜ வீதிகள்ல கேமராவ மறைச்சு வெச்சு உண்மையான மனிதர்களோடு தன்னோட கதாப்பாத்திரங்கள நடிக்க வைப்பாரு. இவர் படங்கள் எப்பவும் மனித மனங்களை பற்றியதா இருக்கும். டைரக்டர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனுசன்.

மித்த டெக்னிக்கல் சமாச்சாரங்களை எல்லாம், விக்கியில் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு தெரியாத விசயத்துல எதுக்கு மூக்க நுழைக்கனும்னு வுட்டுடேன்.

இன்னும் பாக்கலைனா, கண்டிப்பா பாருங்க. அந்த குழந்தைகளுக்காகவே.

வசந்தம் Relaunched