Friday, 7 October 2011

வசந்தம்

“போகின்ற பாதைகள் பலபேரும் போனது, புதிதாகப் பிறந்திட நான் புத்தனில்லை”
- நா. முத்துக்குமார்

பல நாள் பல கதை பல அனுபவம் பல படங்கள் பார்த்து படித்து வளர்ந்த நான், என் கதை என் கனவுகள் என் பயணங்கள் என நான் பார்த்தது,  படித்தது, கற்றது, கேட்டது என பகிர்ந்துக்கொள்ள ஒரு பக்கமாக இந்த வலைப்பதிவை ஆரம்பித்து உள்ளேன்.

புத்தகங்கள் மனித வாழ்க்கையின் மிக அழகான கனவு உலகம். அங்கே வாழ யார் அனுமதியும் வேண்டாம், அதற்க்கு முடிவும் இல்லை. அந்த கனவு பாண்டோரவை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு என் மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன்.  

சுஜாதாவின் நாவல்கள் வழியாக வந்து என் நண்பனாக என் ஹீரோவாக சில நேரங்களில் என் புனைப் பெயராக என்னுள் கலந்துவிட்ட தலைவரின் ஆஸ்தான நாயகன் வசந்த், இந்த வலைப் பூவின் பெயராகவும் இங்கு பயணம் செய்வான். இனி "வசந்தம்".



சுஜாதா சார் இதை படிக்க நேர்ந்தால் "என்னடா முதல் பக்கமே கிளிஷேவா கன்றாவியா இருக்குனு - என் மண்டையில தட்டி, குப்பையா எழுதாதேனு" சொல்லிட்டு போவார்.
மன்னிச்சுடுங்க தலைவா, ஓபனிங் பார்மாலிட்டி வேணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க, அதான் இப்படி.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல ஒரு வசனம், மாதவன் சொல்லுவார் - " எழுத்து ஒரு தவம்; ஸ்பார்க்குனு  சொல்லுவாங்க - சுத்த பொய். எழுதுறதுக்கு, ஒரு சம்பவத்தை உன்னிப்பா கவனிக்குற பக்குவம் வேணும்"
அதுபோல், இன்னொரு கட்டுரையில் "இதைவிட நன்றாக நம்மால் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையும், சில எழுத்துக்களை படிக்கும்போது இம்மாதிரி நாம் எழுத மாட்டோமா என்ற ஆதங்கமும், பொறாமையும் வரும். இவ்விரண்டும் ஒரு நல்ல எழுத்துக்கு தேவை.

இந்த வலையுலகில் பல எழுத்தாளர்கள் மீது உள்ள பொறாமையும், சில எழுத்துகள் மீது உள்ள காதலும் என்னை இந்த முயற்சி எடுக்க வைத்துள்ளது.

ஒகே. மொக்கை போதும்னு நீங்க சொல்றது கேட்க்குது. மேட்டர் எண்ணான நான் வலைப் புய்ப்பம் ஆரம்பிச்சு இருக்கேன். ஆல்ரெடி ரெண்டு தபா பிளாக் ஸ்பாட்லயும், வோர்ட்பிரஸ்லயும் கிரியேட் பண்ணி, ஒரு போஸ்ட் கூட போடல, படிக்குறதுக்கு மட்டும் யூஸ் பண்ணேன். எழுதுறதுக்கு பயமும் கூட. இப்ப எனக்கு இருக்க தைரியத்த எல்லாம் சேர்த்து, ஒரு வித்தியாசமா (!! இதை சொல்லியே தீரணும்னு முடிவு பண்ணுனேன், எங்க வைக்குறதுன்னு தெரியாம இங்க சொருகிறேன்) எங்க விட்டேன்?

ஆங்.. வித்தியாசமா  எழுதலாம்னு முடிவு பண்ணி களத்துல இறங்கியிருக்கேன். இதுல என்னடா வித்தியாசம்னு கிராஸ் கொஸ்டீன் கேட்கப்பிடாது. உங்கள் ஆதரவு வேண்டும். நான் தவறு செய்யிரப்ப நல்லா உரைக்குற மாதிரி, சொல்லிக்குடுங்க நண்பர்களே.

இனி என்னைப் பற்றி கொஞ்சம்

அப்பா வச்ச பேரு ( மம்மிகிட்ட கருத்து கேட்டதா சரித்திரம் சொல்லல, அப்பவே கொஞ்சம் ஆணாதிக்கம் தான்) - அருண் குமார். (சில தருதலைங்க 'கொமாரு'னு கூப்புடும்).

இஸ்கூல்ல எல்லா தடவையும் என் பெயரே முதலில் வருவதால் எனக்கு இந்த பெயர் பிடிக்காமல் போனது. எக்ஸாம் ஹால்ல கூட முதல் டெஸ்க்குல உக்கார வெச்சாங்க, வெறுப்பா இருக்கும், பிட் அடிக்க முடியாது. முன்னாடி ஒருத்தனும் இருக்க மாட்டான் பார்த்து எழுதவும் வழியில்ல. ஒவ்வொரு எக்ஸாம் பேப்பர் குடுக்கும் போதும் (எப்பவும் பெயில் தான்), நான் தான் பர்ஸ்ட் அடி வாங்குவேன். 

இந்த மாதிரி பல வெறுப்புகள் ஒன்னு சேர்ந்து எனக்கு நான் வெச்சுக்க ஆசைப்பட்ட பெயர் - வசந்த் இல்லாங்காட்டி மைக்கேல். மைக்கேல் மீது எதுனால் ஆர்வம் வந்தது என எனக்கு தெரியாது. வசந்த் முன்னமே சொன்ன மாதிரி என் நாயகன்.

படிச்சது -  என்னத்த படிச்சாலும் மண்டையில ஏறல. இருந்தும் ஒரு டிகிரி முடிச்சு(அரியர் இல்லாமல், இங்கு குறிப்பிட வேண்டியது) ஒரு நல்ல ஐ.டி கம்பெனில, விரல் நிறைய சம்பளம்.

மத்தபடி பசங்களுக்கு புடிச்ச எல்லா விசயங்களும் எனக்கும் புடிக்கும். அதாவது இங்கிலீஷ் படங்கள், என்ஜெலினா ஜுலி, கார், பைக், பொண்ணுங்க, அழகான பொண்ணுங்க, ரொம்ப அழகான பொண்ணுங்க, அப்புறம் பிகர்ஸ், கெட்ட வார்த்தை, பீர்னு எல்லாத்துலயும் ஒரு ஆர்வம். 

கூடுதலா இருக்க ஒரே உருப்படியான விஷயம் புத்தகங்கள் படிப்பது. எப்போதும் புக், இன்டர்நெட், மொபைல் என எதிலாவது எதையாவது படிப்பது என் வழக்கம். எல்லா எழுத்துகளையும் படிப்பேன்.

வாரம் ஒரு பதிவு உலக நடப்புகள் பத்தி -  அதில் கதை கவிதை கட்டுரை ஜோக் எல்லாம் இருக்கும் - எனக்கு பிடித்த உலக படங்களின் அறிமுகம் -  என் பார்வையில் உள்ளூர் திரைப்படங்கள் -  விமர்சனம் - அரசியல் பார்வை இதெல்லாம் எழுதுவேன். ஓடாதீங்க, சும்மா சொன்னேன். இப்படி நானும் ஆரம்பிச்சா அடுத்த தடவ இந்த பக்கம் வரகூட மாடீங்கனு தெரியும். பிடித்ததை - படித்ததை - பார்த்ததை  பகிர்வேன்.

டாட்!!!