Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts
Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts

Friday, 15 June 2012

பேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்


பேசாத பேச்செல்லாம்...
- ச.தமிழ்ச்செல்வன், உயிர்மை பதிப்பகம்



புத்தகத்தில் அட்டையிலே நாம் எதிர்க்கொள்ள போவதை உணர்த்திவிட்டார். ஒரு ரத்தம் படிந்த புறா இறகு. இப்படித்தான் அவரது கட்டுரைகளும் வரும் ஒவ்வொரு தருணங்களிலும் ஒரு கரையை உணர செய்கிறது.

இந்த புத்தகத்தை பற்றியோ, எழுதியவர் பற்றியோ எதுவும் தெரியாமல் தான் வாங்கினேன். அதிலும் எனக்கு கட்டுரைகள் தொகுப்பு கொஞ்சம் பிடிக்கும். அதிகமாக ஐந்தாரு பக்கங்கள், படித்துவிட்டு அதை பற்றி எண்ணங்கள் என இருப்பது பிடிக்கும். நாவல்களில் இந்த வசதி இல்லை, நம்மை யோசிக்க விடாமல் இழுத்துகொண்டு செல்லும்.

இப்புத்தகம் வந்து சேர இரண்டு நாட்கள் முன்பு, வழக்கமாக இனையத்தில் தொண்டாற்றி கொண்டு இருந்த போது இம்முறை ட்விட்டர், (எல்லாரும் ஆளுக்கு ஒரு அக்கவுண்ட் ஒப்பன் பண்ணி, என்னை ஃபாலோ பண்ணனும் சொல்லிட்டேன். இல்லாட்டி ரத்தம் கக்கி.....) இருந்த போது ஒரு லிங்க் சிக்க, அதில் ஆரம்பித்து இட்டு சென்ற இடம், கூகிள் பஸ்ஸில்(Buzz) பலநாள் முன்பு நடந்த ஒரு இலக்கிய விவாதம். எழுத்தாளர் கோணாங்கியின் பாழி புத்தகம் பற்றி. வசதிக்கு இல்லாட்டியும் அசதிக்கு படிக்கலாம்னு ஆரம்பிச்சா, அங்க நடந்த சண்டையில ஒன்னு புரிஞ்சுது. இவர் நமக்கு ஒத்து வரமாட்டார். எழுதுனது ஒன்னும் புரியல. அப்புடியே அங்கிருந்து எஸ்கேப்.

அடுத்த நாள், வேற ஒன்னு தேட போய் எஸ். ரா, கோணாங்கி பத்தி எழுதுனது கண்ணுல பட, அத வாசிக்கும் போது தான் கோணாங்கி பத்தி தெரிய ஆரம்பிச்சுது. அவர் ஒரு எழுத்தாளரயும் தாண்டி ஒரு நல்ல மனிதர், நாடோடி. இவரோட எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவம் எல்லாமே கோணாங்கி மேல மரியாத கலந்த ஈர்ப்பு ஏற்படுத்த ஆரம்பித்தது. எனக்கும் பயணங்களில் ஒரு ஈர்ப்பு இருப்பதால், இப்படி பயண அனுபங்களை படிப்பதில் ஒரு சுவாரசியம். அடுத்து அவரோட புத்தகம் தான் வங்கனும் என நினைச்சுட்டு இருக்கும்போது தான் இந்த புக் வந்து சேர்ந்தது.

இந்த தமிழ்ச்செல்வனுக்கும் கோணாங்கிக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்குறீங்களா? இருவரும் அண்ணன் தம்பிகள். அதுமட்டுமில்லாமல், இதில் வரும் பாதி கட்டுரைகளில் கோணாங்கி வருவார். அவரைப் பற்றி படிக்க படிக்க இன்னும் மதிப்பு அதிகமாகிறது. இதுதான் முதல்முறை, படைப்பை படிக்காமல், படைப்பாளியை கொண்டாடுவது. சரி இப்போ புத்தகத்துக்கு வரலாம்.

எல்லாம் அனுபவ கட்டுரைகள். சாதரணமாக ஆரம்பித்து என் மனதை கொஞ்சம் உலுக்கியவை. பல இடங்களில் என் சொந்த அனுபவங்களை இவை உரசிப் பார்ப்பதால் இவைகளை என்னால் இயல்பாக கடக்க முடியவில்லை. ஒரு கட்டுரை முடித்துவிட்டு அவ்வளவு சீக்கிரமாக அடுத்த கட்டுரைக்கு தாவ முடியவில்லை. சிறிதேனும் பழைய நினைவுகளை கிளரிவிடுகிறார். சில சமயம் குற்றவுணர்ச்சி மேலிடுவதை தடுக்க முடியவில்லை. படிக்கும் அனைவருக்கும் இந்த வலியோ சோகமோ ஏற்படுமா என தெரியவில்லை, ஆனால் அவ்வளவு சீக்கிரம் இவைகளை கடந்து போவது சிரமம். ஒருவன் இது போன்ற எழுத்துக்களை எளிதாக கடக்க முடிந்தால் அவன் வாழ்க்கையின் மறுப்பாதியை இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லையாகும்.

வளைத்து சுளித்து தமிழை கடினப்படுத்தாத எழுத்து. சில நேரம் என் டைரியை படிப்பது போலவும், சில சமயம் அடுத்தவர் வாழ்க்கையை பார்த்துவிட்டு மவுணமாக போவதுமாக அனுபவங்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன.

பயணத்தில் பாதை - பஸ் ஸ்டாண்ட் பற்றியது. ஒடிய கால்கள் - கோணாங்கி(இவருக்கு தம்பி) சின்ன வயதில் வீட்டை விட்டு ஓடிவிட்டு, கொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்தது பற்றி, மரணத்தின் நிழல் - அம்மாவின் கடைசி தருணத்தில் பக்கதில் இருந்தபோது பேசிய மவுணத்தை பற்றி. பித்தாகி பேதையாகி - பித்து பிடித்த நண்பர்களை பற்றி என தன் வாழ்வில் அவர் கண்ட பல தருணங்களை நமக்கு காட்டுகிறார். மொத்தம் 24 கட்டுரைகள்.

பித்தாகி பேதையாகியில் ஒரு நண்பன் இவரிடம் இருநூறு ருபாய் பணம் வாங்கிவிட்டு ரெண்டு கவிதைகளை குடுத்து அடமானமாக வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு செல்கிறார். சில நாள் கழித்து இன்னும் இரண்டு கவிதை குடுத்து வட்டியாக வைத்துக்கொள்ள சொல்கிறார். இன்னொருவர் கட்டு கட்டாக கவிதைகள் குடுக்க, அதில் ஒன்றுகூட தேறாதது. இதை சொல்ல சங்கடப்பட்டு, இதை பதிப்பிக்க ரொம்ப செலவாகும் என சாக்கு சொல்லி கழண்டு கொள்ள, அந்த கவிதைகளை பதிப்பிக்கவே அவர் மிகவும் கஷ்ட்டப்பட்டு  ராப்பகலாய் உழைக்க ஆரம்பித்து, நொடிந்து போய் ஏழ்மையில் குழந்தைகளை கவனிக்கமுடியாமல் இறந்து விடுகிறார். கவிதையை பலர் தங்களது வாழ்வின் ஒரு அங்கமாகவும், அதை எவ்வளவு நேசித்தாகவும் பல கட்டுரைகளில் சொல்லி என் மறமண்டைக்கு உறைக்க வைக்கிறார் தமிழ். 

ஒரு எழுத்தாள நன்பனிடம் இருந்த நெருக்கம், பின்பு வேலை நிமித்தமாக பிரிந்த பின் பல ஆண்டுகள் கழித்து அவரை தெருத் தெருவாக சேலை விற்பவராக பார்ப்பதும். சில நாள் கழித்து அவர் மொழிபெயர்ப்புகளில் ஈடுத்திக்கொண்டிருப்பதை நினைத்து மகிழ்வதும், அந்த எழுத்தாளாரின் இறப்பிற்க்கு சென்றுவிட்டு அவருக்கு கடணாய் தந்த கு. அழகிரிசாமியின் கதைகள் கேட்க நினைத்து பற்றி , தன்னை தானே பழித்துக் கொள்வதுமாக அவரின் குற்றவுணர்வுகளை நம்மிடத்தே கடத்திவிட்டு செல்கிறார் தமிழ்ச்செல்வன்.

பல இடத்தில் சாதிக் கொடுமைகள் வேறு. இவர் ஒரு நடுநிலை சமுதாயத்தில் பிறந்துவிட்டு மேல் சாதியிடம் படும் பாடும், தாழ்ந்தவர்களிடம் நெருங்க முடியாத தடைகளும் பல இடத்தில் சாடியுள்ளார்.

மொத்ததில் ஒரு வாசிப்பனுபம் என்பதையும் தாண்டி எனக்கு மிகவும் நெருக்கமாகவும் தவிர்க்கமுடியாத எழுத்தனுபமாகவும் மாறிவிட்டது  பேசாத பேச்செல்லாம் புத்தகம்.

பி.கு - புறா இறக புக் மார்க்கா யூஸ் பன்னுங்க, நல்லாயிருக்கு.